Best Property Management in India
மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு இடமாவது வாங்கி ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருக்கிறது. ஆனால், மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே தந்திருக்கிறோம்.
விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் புரோக்கர்கள் ஆகியோர்களுக்கு இது தகுந்த காலம் ஆகும். மனை வாங்க இது சரியான தருணம்
நீங்கள் வாங்கப்போகும் மனை, யாருடைய பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த 30 வருடங்களுக்கு, அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.
சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள சமீபத்திய பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறைப் பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்க்கலாம்.
நீங்கள் வாங்கப்போகும் மனையின் தள வரைபட விவரங்களைச்சரிபார்க்கவும்.
நீங்கள் வாங்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைப் பார்க்க வேண்டும். அதாவது, மனையானது விவசாய நிலம் அல்லாத குடியிருப்புக்கான மனையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
வாங்கும் நிலமானது அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். லேஅவுட் விவரங்கள் அடங்கிய லேஅவுட் பிளான் ஆவணத்தின் நகலைச் சரிபார்ப்பதன் மூலம், உரிய அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
ஆன்லைனில் பார்க்கும் வசதியிருந்தால் அதன் மூலமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கலாம். சி.எம்.டி.ஏ இணைய தளத்தில், 2000-ம் ஆண்டுக்குப்பிறகு அங்கீகரிக்கப் பட்ட லே அவுட்டுகளை உறுதி செய்யமுடியும்.
வாங்கும் மனையின்மீது உயர் மின்னழுத்தக் கடத்திக் கம்பிகள் எதுவும் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
தற்போதைய நில உரிமையாளரின் நம்பகத்தன்மையை, நில வருவாய்த்துறைப் பதிவுகளை ஆன்லைனில் பார்க்கும் வசதி மூலம் சரிபார்க்கலாம்.
நில வரியானது தற்போதைய நில உரிமையாளரின் பெயரில் செலுத்த வேண்டிய துறைக்குச் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். (சென்னையைப் பொறுத்தவரை, 4,800 சதுர அடிக்குக் குறைவான காலி நிலத்துக்கு நில வரி இல்லை)
உண்மையில் நமக்கு எப்படி மனை வாங்குவது அவசரமாக உள்ளதோ, அதே போல் மனை விற்பவருக்கும் அவசர நிலை இருக்கும். இந்த உண்மையை அறிந்து உடனடியாக விலையை ஏற்றிக் கூறுவதை ஒப்புக் கொள்ள வேண்டாம்.
ஒரு மனை வாங்கினால் ஒரு மனை இலவசம், வீடு வாங்கினால் தங்கக்காசு இலவசம் என்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி விட வேண்டாம். இந்த நூற்றாண்டில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது. இலவச பொருட்களுக்குரிய தொகையை விட பலமடங்கு உங்களிடம் வசூல் செய்துவிட்டுத்தான் அதை இலவசமாக வழங்குவது போல் பில்டர்கள் தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
வாங்கவிருக்கும் மனையின் மதிப்பை, குறிப்பிட்ட மாநில அரசுத் துறையின் இணைய தளத்தில் பார்த்து, அந்த மதிப்புக்கேற்ப ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும்.